இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
தமிழகத்தின் மேற்கு மண்டல நகரம் கோவையை மையமாக வைத்து இயங்கி வந்த “பக்ஷிராஜா ஸ்டூடியோஸ்” என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்த திரைப்படம்தான் “மலைக் கள்ளன்”. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் சிங்களம் என ஆறு மொழிகளில் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படத்திற்கு சில தனிச்சிறப்புகள் உண்டு.
முதல் ஹீரோ தேர்வு சிவாஜி
படத்தை தயாரித்து இயக்கியிருந்த பக்ஷிராஜா ஸ்டூடியோஸ் அதிபரான எஸ்.எம் ஸ்ரீராமுலு நாயுடு, தமிழில் இத்திரைப்படத்திற்கு நாயகனாக முதலில் தேர்ந்தெடுத்து, நடிக்க வைக்க இருந்தது நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அப்போது ஏராளமான படங்களை கையில் வைத்துக் கொண்டு, பகல் இரவு பாராமல் மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த சிவாஜியால் இத்திரைப்படத்திற்கென தேதி ஒதுக்கிக் கொடுக்க முடியாத ஒரு இக்கட்டான நிலை. நிலைமையை பக்குவமாக தயாரிப்பு தரப்பிடம் எடுத்துச் சொல்லி, அண்ணனை வேண்டுமானால் கேட்டுப் பாருங்கள் என மக்கள் திலகம் எம்ஜிஆரை சிவாஜி பரிந்துரைக்க, அதன்பின் வாய்ப்பு எம்ஜிஆரிடம் சென்று, “மலைக்கள்ளன்” நாயகன் ஆனார் எம்ஜிஆர். தொழில் ரீதியாக இரு துருவங்களாக இருந்து வந்தாலும், அவர்களது தனிவாழ்வில் உடன் பிறவா சகோதரர்களாகவே எம்ஜிஆரும், சிவாஜியும் வாழ்ந்து வந்தனர் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
கொள்கை ரீதியாக நோ சொன்ன கருணாநிதி
சுதந்திர போராட்ட தியாகியும், பழுத்த காங்கிரஸ்வாதியுமான நாமக்கல் கவிஞர் திரு வெ ராமலிங்கம் பிள்ளையின் கதையான “மலைக்கள்ளன்” திரைப்படத்திற்கு, திராவிட கட்சியில் இருந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதி வசனம் எழுதினால், படத்திற்கு வோறொரு வண்ணம் கிடைத்து, படம் நன்றாக வரும் என்ற எண்ணம் படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடுவிற்கு இருந்தது. அதன்படி கருணாநிதியை வசனகர்த்தாவாக ஒப்பந்தம் செய்ய எஸ்எம் ஸ்ரீராமுலு நாயுடு கருணாநிதியிடம் கேட்க, தான் பெரிதும் மதிக்கக்கூடிய காங்கிரஸ்காரரான வெ ராமலிங்கம்பிள்ளையின் கதைக்கு, நான் வசனம் எழுதினால் இரண்டு கட்சியை சேர்ந்த ரசிகர்களுக்கும் அதிருப்தியை தர நேரிடுமோ என்றும், அதனால் படம் சரியாக போகாமல் போய்விடுமோ என்ற ஒரு சிறு அச்சமும் வர, அந்த வாய்ப்பை தவிர்த்துவிட்டார் கருணாநிதி.
எம்ஜிஆருக்காக வசனம் எழுதிய கருணாநிதி
ஆனால் கருணாநிதிதான் வசனம் எழுத வேண்டும் என்பதில் திடமாக இருந்த படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஸ்ரீராமுலு நாயுடு, எம்ஜிஆரிடம் ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் முன் வைத்தார். படத்தின் வசனத்தை கருணாநிதி தான் எழுத வேண்டும் எனவே தாங்கள் எப்படியாவது அவரிடம் பேசி, படத்தின் வசனங்களை எழுத, அவரை சம்மதிக்க வைக்க வேண்டும் என கூற பின் தன் நண்பர் எம்ஜிஆருக்காக ஒத்துக் கொண்டு படத்தின் வசனகர்த்தாவானார் கருணாநிதி.
இவர் இருந்தால் படம் நிச்சயம் வெற்றி என்றிருந்த 1950களின் உச்ச நாயகியாக இருந்த நடிகை பி பானுமதியை படத்தின் நாயகியாக்கினர் படக்குழுவினர். படத்தின் நாயகன் எம்ஜிஆர், நாயகி பி.பானுமதி, படத்தின் வசனகர்த்தா கருணாநிதி என்றால், படத்தின் வெற்றி குறித்து வேறேதும் சொல்ல வேண்டுமா என்ன? தமிழ் திரையுலகில் பின்னாளில் வந்த 'ராபின்ஹூட்' வகை படங்களின் முன்னோடி எது? என்றால் அது “மலைக்கள்ளன்” என நிச்சயமாக கூற முடியும்.
டிஎம்எஸ்-க்கு முதல் படம்
தமிழ் திரையுலக வரலாற்றில் ஒரு வித்தியாசமான கதைக் களத்துடன் வெளிவந்த இத்திரைப்படம், எம்ஜிஆரின் திரையுலகப் பயணத்தில் ஒரு மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தித் தந்த திரைப்படமாகவும் இருந்தது. எம்ஜிஆருக்காக பின்னணிப் பாடகர் டிஎம் சவுந்தரராஜன் பின்னணி பாடிய முதல் பாடலான “எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” என்ற பாடல் இத்திரைப்படத்திற்கு ஒரு தனிச்சிறப்பை பெற்றுத் தந்த பாடலாக இருந்தது என்பதை யாராலும் மறுக்க இயலாது.
பின்னாளில் வந்த எம்ஜிஆரின் திரைப்படங்களில் இடம் பெற்ற அத்தனை கொள்கைப் பாடல்களுக்கும் ஆணிவேராக இருந்த பாடல்தான் இந்தப் பாடல். அந்த வகையில் எம்ஜிஆரின் திரையுலகப் பயணத்தில் ஒரு மாபெரும் மாற்றத்தை தந்து, பின்னாளில் கலையுலகிலும், அரசியல் உலகிலும் ஒரு அசைக்க முடியாத சக்தியாக எம்ஜிஆர் உருவானதின் ஆரம்பப் புள்ளியாக இருந்தது தான் இந்த “மலைக்கள்ளன்” திரைப்படம்.